valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 25 July 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

அவர் சாப்பாட்டுக் கூடத்தில் இருந்தார்; எல்லாருக்கும் உணவு பரிமாறி முடிக்கப்பட்டது. சாப்பிடப் போகும் தருணம். திடீரென்று அந்த மதிய நேரத்தில் பசியால் வாடிய நாய் ஒன்று அவ்வம்மையார் உட்கார்ந்திருந்த கதவருகில் வந்து நின்றது.

அம்மையார் உடனே ஒரு கால் சோள ரொட்டியைத் தம்முடைய தட்டிலிருந்து எடுத்து நாய்க்குப் போட்டார். அதே நேரத்தில், உடம்பெல்லாம் சேற்றுடன், பசியால் வாடிய பன்றியும் ஒன்று வந்தது. (அதற்கும் அவர் உணவளித்தார்).

ஈதனைத்தும் சுபாவமாகவே நடந்ததால், அவர் இச் சம்பவத்தை அறவே மறந்து போனார். ஆனால் பிற்பகல் நேரத்தில் பாபாவே இச் சம்பவத்தைக் கிளறினார்.

உணவுண்ட பிறகு, பிற்பகலில் அவ்வம்மையார் வழக்கம் போல் மசூதிக்கு வந்து, சிறிது தூரத்தில் அமர்ந்தபோது பாபா அவரிடம் அன்புடன் கூறினார்.

"அன்னையே, இன்று எனக்கு நீர் உணவளித்தீர்; என்னுடைய வயிறு தொண்டைவரை நிரம்பிவிட்டது. நான் பிராணனே போய்  விடும் போன்ற பசியால் மிக வாடினேன். நீர் எனக்கு உணவளித்துத் திருப்தி செய்துவிட்டீர்.

"இதைத்தான் நீர் எப்பொழுதுமே செய்ய வேண்டும். இதுவே உமக்கு சத்தியமான சேமத்தை அளிக்கும்.மசூதியில் அமர்ந்து கொண்டு நான் அசத்தியத்தை என்றுமே, எப்பொழுதுமே பேச மாட்டேன்.

"இந்தக் காருண்யம் உம்மிடம் எப்பொழுதும் இருக்கட்டும். முதலில் பசியால் வாடுபவர்களுக்கு உணவளித்து விட்டுப் பிறகு சாப்பிடும். இந்த ஆசாரத்தை வாழ் நாள் முழுவதும் கடைபிடிப்பீராக ".

அம்மையாருக்கு சாயி சொன்னது ஒன்றுமே விளங்கவில்லை. சாயி சொன்னதன் பொருள் என்ன? அவருடைய வார்த்தைகள் எப்பொழுதுமே அர்த்தபுஷ்டியில்லாமல் இருக்காதே! (இவ்வாறு அம்மையார் சிந்தித்தார்).

ஆகவே அவர் கேட்டார், "நான் எப்படி உங்களுக்கு உணவளித்திருக்க முடியும்? நானே மற்றவர்களை சார்ந்து காசு கொடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேனே?"

"எனக்கு மிகுந்த அன்புடன் அளிக்கப்பட்ட  சோள ரொட்டியைத் தின்று நான் உண்மையிலேயே பசியாறினேன்; இல்லை, இல்லை, அந்தத் திருப்தியில் நான் இன்னும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறேன்.

"நீர் சாப்பாட்டுக்கு  உட்கார்ந்தபோது திடீரென்று பசியால் வாடிய, வயிறு காய்ந்த நாயொன்றை வாயிலில் பார்த்தீர் அல்லவா ? நானும் அந்த நாயும் ஒன்றே என்று அறிவீராக!

"அவ்வாறே உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்ட பன்றியும் பசியால் வாடுவதைப் பார்த்தீர். அப் பன்றியும் நான்தான்!"

பாபாவின் திருவாய்மொழியைக் கேட்ட அவ்வம்மையார் மனத்துள்ளே  வியப்படைந்து போனார். எத்தனையோ நாய்களும் பன்றிகளும் பூனைகளும் சுற்றி அலைகின்றன. அவை எல்லாவற்றிலும் பாபா இருக்கிறார்? இது எப்படி சாத்தியம்? (என்று அம்மையார் நினைத்தார்)
 
 

No comments:

Post a Comment